Sunday, October 11, 2009

சத்தமேயில்லாமல்…

சத்தமேயில்லாமல்…

P.S..ஜூஹைனா ஃபைஜல், சீர்காழி.

SHARJAH ISLAMIYA MADRAS ASSOCIATION ஆண்டு விழா மலரில் பதிந்த பதிவு...

வானத்தில் மிளிர்ந்துக் கொண்டுருக்கும் நட்சத்திரங்கள்., இதமாக வருடும் தென்றல்., கரைந்துக் கொண்டிருக்கும் நிலா..! கனைக்கக் கூட கனம் யோசிக்கும் அளவிற்கு நிசப்தம். அந்த ரம்மியமான சூழலில் இருந்த அன்சாரின் அகமோ ரணமாயிருந்தது. மொட்டை மாடியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து வானத்தை விழியினூடே வெறித்துக் கொண்டிருந்த அன்சாரின் மனம் சிதைந்துப் போயிருந்தது.

ஹும்..! இது என்ன அழகு..? எட்டாத உயரத்தில்..?! அன்சாரின் மனதில் முட்டி மோதிய வார்த்தைகள் கண்ணீராய் திரண்டு கன்னங்களில் உருண்டது. 'என்னங்க மணி 11:30 ஆயிருச்சிங்க..,' என்று ஈனஸ்வரத்தில் கூறிக் கொண்டே கண்ணீரை துடைத்துவிட்டாள் ஆயிஷா. திரும்பி தன் மனைவியைப் பார்த்த அன்சார், மiதை திடப்படுத்திக் கொண்டு, 'நீ இன்னும் தூங்கலையாம்மா?' என்று ஒப்புக்குக் கேட்டார். என் ஒரு கண்ணை துடிக்கத் துடிக்க புடுங்குனதுக்கப்புறம்..எனக்கு எப்படிங்க தூக்கம் வரும்?! அழுது அழுது வற்றிப் போன கண்களும், வரண்டு போன தொண்டையுமாய்.. சோர்ந்து போய் சொல்லிய ஆயிஷாவின் நிலையை கண்ட எவரின் நெஞ்சமும் சுக்கு நூராகி விடுமென்றால், கணவரின் நிலையை என்ன சொல்ல?!

திடப்பட்ட நெஞ்சம் திரவமாய் கரைய அதற்கு மேல் அடக்க முடியாமல் அருவியாய் கொட்டிய அன்சாரின் கண்ணீரை துடைக்கக்கூட தெம்பில்லாமல், நாற்காலியின் கைப்பிடியில் தலைசாய்த்தவள், இருண்ட வானம் நோக்க ஏனோ? கண்களை இறுக மூடிக்கொண்டாள், தளர்ந்து போன உள்ளத்துடன், தன் மனைவியின் தலையை கோதியவாறே நிமிர்ந்து அமர்ந்த அன்சாருக்கும் அச்சூழலில் இருண்ட வானமும், கனத்த அமைதியும், மிரட்டலாய் தோன்ற 'ஆயிஷா கீழே போலாம் வா' மெதுவாக எழும்பி தன் மனைவிக்கு கைக் கொடுத்தார். எத்தனை நாள் ரசித்த இத்தித்திக்கும் இரவு இன்று இருளாய் தோன்றி திகிலுறச் செய்கிறது. இது விந்தையல்ல..! நியதி..! மனிதனின் மனம் இருக்கும் நிலையைப் பொறுத்துத் தான் அவனது ரசிப்பும்.., சலிப்பும்...!

மெதுவாக படியிறங்கிய அத்தம்பதிகள்.., மகனின் அறையை எட்டிப் பார்க்க, அவன் சுருண்டு போய் படுத்துக் கிடந்தான். சாப்பிட்டு இரு நாட்களாகி விட்டதே! பசி மயக்கத்திலையாவது உறங்கட்டும் என்று வேதனையோடு எண்ணியபடியே படுக்கைக்கு சென்றார்கள். இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ?! அல்லாஹ் போதுமானவன்! ஏன் இவர்களுக்கு இந்நிலை.?! என்ன நேர்ந்து விட்டது..?! நாம் பத்து மாதங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தேயாக வேண்டும்.

எட்டாத உயரத்தில் இத்தனை அழகா?! என்ற அன்சாரின் விரக்தி வார்த்தைகளில் அர்த்தம் இல்லாமலில்லை! கார் மேகமாய் கூந்தல்... ஒளிரும் நிலவைப் போன்ற முகம்.., அவள் சிரித்தாள் நட்சத்திரங்களை தெளித்தாற் போன்ற.. ஓர் அசாத்திய அழகுப் பதுமையை பெற்றடுத்தவர் தான் அன்சார். ஆணொன்றும், பெணணொன்றுமாய் முத்தாகப் பெற்றெடுத்த இரு செல்வங்கள் தான் ஷமீம் ஷகீனா! ஒரு கொடியில் பூத்த இவ்விரு மலர்களும் இருவயதே வித்தியாசம் கொண்டவர்கள். அன்பு, பாசம், பண்பு, மரியாதை என அனதை;து உயர் குணங்களினாலும் வார்த்து எடுக்கப்பட்ட வண்ணத்து பூச்சிகள்..!

பட்டப்படிப்பு முடிந்து ஷமீமின் மேற்படிப்புக்கான செலவு வருவதற்குள் 18 வயது நிரம்பிய தன் மகளின் திருமணத்தை முடித்து விட தீவிரமாய் இறங்கி விட்டார் அன்சார். மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு திட்ட மிட்ட செலவு அத்தியாவசியமாயிற்றே! பத்தாவது மட்டுமே முடித்திருந்த அந்த அழகுப் பதுமையை பெண்ணெடுக்க உள்ளூரிலேயே பலர் விரும்ப, அன்சாருக்கோ சித்தூரில் இருந்து வந்த வரன் மிகவும் பிடித்திருந்தது அல்லாஹ்வின் நாட்டம்.

'ஷமீம் பொண்ணு பாத்துட்டு போனவங்களோட முடிவ தெரிஞ்சுக்கிட்டு, மாப்பிள்ளையோட ஃபோட்டோவ இன்னைக்கு கொண்டு வர்ரதா அப்துல்லா பாய் சொல்லியிருக்காரு.. நீ இப்ப வெளிய கௌம்பிடாத'

'அத்தா மாப்பிள்ளை ஊர் ரொம்ப தூரமா இருக்கேத்தா..! கார் வச்சு போனாலே ரெண்டு மணி நேரமாகுமாம். 'பஸ்ல' போனா 2½ மணி நேத்துக்கும் கொறையாம போவுமே?! உள்ளூரிலேயே எத்தனை பேரு கேட்டு வர்றாங்க.., நல்லா யோசிச்சி முடிவு செய்யலாமேத்தா?' தங்கை மேல் கொண்ட கொள்ளை பிரியம் அவன் குரலில் தெரிந்தது.

நீ சொல்றது வாஸ்தவம் தாம்ப்பா.., உள்ளூர் மாப்பிள்ளைங்க 'லன்டன'; 'பிரான்ஸ்' னு நம்ம உறவுக்காரங்க இல்லாத நாட்டுலயா இருக்காங்க' பையன் எப்படி., அங்க எப்படி இருக்கான்னு நமக்கெப்படிப்பா தெரியும்?! பொண்ண கொடுக்குறோம்., பையனோட நடத்தை ரொம்ப முக்கியம்பா.., இந்த சித்தூர் மாப்பிள்ளைன்னா 'துபாய்' ல இருக்கார். அங்க இருக்குற உன் மாமனுக்கு இந்தப்பையன நல்லா தெரிஞ்சிருக்கு., ரொம்ப மரியாதை, குணமான ஆளுன்னு சொன்னாரு.., பையனும் ஓரளவு படிச்சிருக்காரு.., அதனால தாம்பா எனக்கு பிரியமாயிக்கு' அன்சார் கூறிக் கொண்டிருக்கும் போதே 'அப்துல்லா பாய்' வந்து விட்டார்.

அன்சாரு.., சந்தோஷமான செய்திதான்! பொண்ணு பார்த்துட்டு போனவகளுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம். மாப்பிள்ளையோட ஃபோட்டோ கொண்டு வந்துருக்கேன். இப்ப நீங்க தான் முடிவ சொல்லனும்' அமர்ந்த அப்துல்லாஹ் பாய் உற்சாகமாய் கேட்டார்.

'மாப்பிள்ளைய பத்தி நாங்க முழுசா விசாரிச்சிட்டோம். எங்களுக்கு முழுத் திருப்தி தான். ஆனா குடும்பத்தப் பத்தி நீங்கதான் நல்லா விசாரிச்சி சொல்லனும். ஏன்னா, தூரத்துல குடுக்குறோம்., நாங்க நிம்மதியா இருக்கனும்ல...!'

'என்ன அன்சாரு.., இப்படி சொல்லிப்புட்டே., விசாரிக்காம சொல்வேனா?! ஒரே பையன்.., பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். மாமனார் இல்லாததுனால, இந்தக் குடும்பத்துக்கு எல்லாமா இருந்து செய்யுறது, மாமியாரோட அக்காவும், அக்கா புருஷனுந்தான். இதெல்லாம் ஏற்கனவே உங்க கிட்ட சொன்ன விஷயங்கள் தான். என்ன.., அந்த அக்காவுக்கு தான் கொஞ்சம் வாய் ஜாஸ்தி.., ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி ஒன்னு இருக்கும் தானே..?! அதான் இந்தக் காலத்து பசங்க., கல்யாணமாகி கொஞ்சு நாள்ல அவங்க இருக்குற நாட்டுக்கே அழைச்சிட்டுப் போயிடுறாங்களே.! நம்ம பொண்ண மாப்பிள்ளை கையோட கூட்டிட்டுப் போவாம இருந்தா சரி!' வெற்றிலை கரையேறிய பற்கள் தெரிய பலமாகச் சிரித்தார் பாய்.

உற்றாரும், ஊராரும் வாழ்த்த இரு மனமும் திருமணத்தில் இணைந்தது. ஜோடிப் பொருத்தம் நல்லாயிருக்குப்பா..,' என்று பெரியவர்கள் ஒரு புறமும் 'ஷாரூக், ஷகீனா' பெயர்ப் பொருத்தமே அசத்தலா இருக்குடா' என்று ஷமீமின் நண்பர்கள் மறுபுறமும், ஆளுக்கொருவிதமாய் பாராட்டப் பாராட்ட., பேராற்றல் நிறைந்த அல்லாஹ்விற்கு நன்றி கூறிய அக்குடும்பம் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தது. மூன்று நாட்கள் இனிதே கழிந்தது.

'இந்தப்பாரும்மா ஆயிஷா.., மாப்புள ஒரு மாசத்துல பயணம் கௌம்பிடுவாரு.., அதனால இப்ப பொண்ண அழைச்சுட்டு போறதோட தங்க வச்சிக்கவோம். நீங்க தம்பிய பயணம் அனுப்ப வர்றதோட பொண்ண அழைச்சுட்டு வந்துக்களாம்., இப்ப பொண்ண சீக்கிரம் கௌம்பச் சொல்லுங்க.., அஸருக்கு முன்னாடி நாங்க கௌம்பனும்' அதிகாரத் தோணையோடு உத்தரவிட்டள் மாமியாரின் அக்காள் ஜைனப்.

ஆயிஷா ஏதோ சொல்ல வாயெடுக்க வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டது. தன் வார்த்தகைகள் எடுபடாது என்பதை அவளால் உணர முடிந்தது. தன் மகளிடம், 'இடையில நீயும், தம்பியும், நாலு நாளு இங்க வந்து தங்கிட்டு போற மாதிரி நான் சம்மந்தியம்மாகிட்ட பிறவு ஃபோனு போட்டு சொல்றேம்மா.., நீ தைரியமா இருக்கனும'; தன் கலங்கிய மனதை கட்டுப் படுத்திக் கொண்டு மகளுக்கு தைரிய மூட்டினாள்.

ஷகீனாவிற்கு பதற்றமாய் இருந்தது.18 வருடங்களாக வாழ்ந்த சூழலிருந்து.., பெற்றவரை, பிறந்தவரை, பிரிந்து அறிமுகமில்லா அந்நியக் குடும்பத்தில் அடியெடுத்த வைக்கப்போகும், எப்பொண்ணுக்குமே இருக்கக் கூடிய இனம் புரியாத பயம் ஷகீனாவின் மனம் முழுக்க பரவிக் கிடந்தது. ஒரு வழியாகக் கிளம்பி, விடை பெறும் வேளையிலே.., ஷகீனாவால் முடியவில்லை.., அவளது அகன்ற விழிகள் உடைந்த அனணக்கட்டானது...! பெற்ற நெஞ்சங்களாலும் அடக்க முடியாமல் அழுதுவிட, கட்டுப்படுத்திக் கொண்ட ஷமீம் கண்ணில் நீர் மல்க தங்கையை ஆறுதல்படுத்தினான்.

ஜைனப் தொண்டையை கனைத்தவளாக., 'ஏம்மா நாமளும் மனுஷ, மக்க இருக்கிற இடத்துக்குத் தாம்மா போறோம். கண்ண தொடச்சிட்டு கௌம்பி வாம்மா.' என்று எகத்தாளமாகக் கூற, அச்சூழலில் ஷமீமிற்கு பற்றிக் கொண்டு வந்தது. அவன் சமாளித்துக் கொண்டு, 'ஏன் மாமி, நீங்க கல்யாணம் பண்ணிட்டு போகும் போது, உங்க வீட்ல எல்லாருக்கும் 'டாட்டா' சொல்லிட்டு கௌம்பிடீங்களோ.?! என்று நக்கலாக நகைத்தான்.

'நான் எப்படியோப்பா.., ஆனா நீங்க நெனச்ச மாதிரி குடுத்துட்டு, உசத்தியான மாப்பிளைய புடிச்சதுக்கு உங்க தங்கச்சி தாராளமா 'டாட்டா' காட்டிட்டு வரலாம்' பட்டென்று கூறிய ஜைனப் விறு, விறுவென்று வாசற்படியை நோக்கிப் போனாள். சுற்றியிருந்நதவர்கள் இப்படியொரு பதிலை எதிர்பாரததால் திகைத்துப் போய் நின்றனர். சுதாரித்துக் கொண்ட மாப்பிள்ளை ஷாரூக்.., 'மச்சினப்புள்ள, மாமா, மாமிக்கு சட்டுனு கௌம்ப முடியாட்டியும், நீங்க வந்து உங்க தங்கச்சிய பார்த்துட்டு போங்க.' என்று ஷமீமின் தோளில் கைப் போட்டு கூறி, நிலைமையின் இறுக்கத்தைத் தளர்த்தினான். அனைவருடனும் விடைப்பெற்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு காரில் ஏறியதும், கார் புறப்பட்டது.

அன்சாரின் குடும்பத்தில் நாள்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. 'அன்சாரு கூப்பிட்டு அனுப்புனியளா..?' கேட்டுக் கொண்டே நுழைந்தார் அப்துல்லாஹ் பாய்.

'ஆமா பாய் உக்காருங்க., புள்ளய போயி ஒரு எட்டு பாத்துட்டு வரச் சொல்லத்தான் கூப்பிட்டனுப்புனேன். போயி 15 நாளாச்சு, இடையில வந்துட்டு போகச் சொல்லுங்கன்னு என் வூட்டுக்காரம்மா ஃபோன்ல கேட்டதுக்கு, 'தம்பிக்கு அலைச்சலா இருக்கு, முடியாதுன்னு' சம்மதியம்மா சொல்லிட்டாங்க.., ஷமீம அனுப்ப தயக்கமா இருக்கு அதான்..,

'புள்ளைட்ட ஃபோன்ல பேசினீங்களா?' அப்துல்லாஹ் கேட்கும் போதே ஷமீம் இடைமறித்தான்.

'பேசினா., அளந்து அளந்து பேசுறா..! பேசுறது என் தங்கச்சி தானேன்னு எனக்கு சந்தேகமே வருது நல்ல குடும்பத்துல போயி நீங்க..,'

'ஷமீம்.. வாயை மூடு! அன்சார் சத்தமாக அதட்டினார் அல்லாவோட நாட்டமில்லாம, மனுஷனால எந்த ஒரு ஜோடியையும் சேர்க்கவும் முடியாது பிரிக்கவும் முடியாது.! அத மறந்துட்டுப் பேசாத!! என்று மகனை கண்டித்தார்.

சின்ன, சின்ன விஷயங்களை பெரிது படுத்தி குறைக்கூறும் கூட்டத்துக்கிடையை., அன்சாரை எண்ணி நெகிழ்ந்துப் போனார் அப்துல்லாஹ் பாய். அன்று மதியமே சித்தூருக்குப் புறப்பட்டார்.

'ஜெய்தூனம்மா., ஜெய்தூனம்மா..!'

'அட, அப்துல்லான்ணே..! வாங்க, என்ன இந்த சாயங்கால நேரத்துல..?'

'சும்மா எல்லாரையும் பாத்துட்டு போவாம்னு தாம்மா வந்தேன்'

'ஷகீனா ஒங்க ஊரு காரங் வந்துருக்காக பாரு.! என்ற மாமியாரின் குரல் கேட்டதும், காப்பிக் கலக்கிக் கொண்டிருந்த ஷகீனா' கதவிற்கு பின் நின்று 'வாங்க மாமா' என்றழைத்தாள்.

'வர்ரேம்மா நல்லாயிருக்கியா?'

'நல்லாத் தான் வச்சிருக்கோம்.' கூறிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ஜைனப்.

'கண்டிப்பா..! நீங்க நல்லா தான் வச்சிருப்பீங்க... பொண்ணும் உங்கள நல்லா தான் கவனிச்சிட்டுருக்கும்!' சூனியக்கார அம்மாவுக்கு சூசகமாக பதிலளித்தார் பாய்.

'அப்படி சொல்லித் தானே எங்க தலையில கட்டியிருக்கீங்க., அத போகப் போகத் தான் பார்க்கனும்!'

'என்னம்மா., இப்படி பேசுறீங்க' அதிர்ந்துப் போனார் அப்துல்லாஹ். 'இல்லையா பின்னே..! 80, 100 ன்னு வந்த இடத்தை பார்த்தோம் அதிலேயும் 10 கொறச்சி, இது பொண்னும் தங்கம், அது குணமும் தங்கம், ஒரே பொண்ணு அத்தாவும், அண்ணனும் நெனச்சப்ப யெல்லாம் இந்தப் பொண்னுக்கு செய்ய மாட்டாங்களா.., அது, இதுன்னு சொல்லி கட்டி வச்சீங்களே அத சொன்னேன்' தன் வாயிலிருந்து வந்த யதார்த்த வார்த்தைகளை, இங்கு கோர்வையாக்கி, கோர்த்து வாங்கும் ஜைனப்பைக் கண்டு மனதிற்குள் மிரண்டு தான் போனார் அப்துல்லாஹ் பாய்.

இப்ப அது கிட்ட இருக்கிறது 50 பவுனான்னே நிறுத்துப் பார்த்தாத் தான் தெரியும்!' தொடர்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருந்த ஜைனப்பின் வார்த்தைகளை, வெளியில் சென்று விட்டு திரும்பிய ஷாரூக் காதில் வாங்கி விட்டான். அவனுக்கு அசிங்கமாக இருந்தது.

'பெரியம்மா., என்ன பேசுறீங்க..? அவ இனிமே நம்ம வீட்டுப் பொண்ணு, அவளுக்கு தேவையானதை நாமதான் செய்யனும். என்ன 10 பவுனு கொறையுதா? கவலைய விடுங்க., நான் போயி 20 பவுனா அனுப்பி வைக்கிறேன், போட்டு விடுங்க.., அத விட்டுட்டு., வந்தவர்ட்ட போயி..' எரிச்சலை வார்த்தைகளில் கொட்டி விட்டு., 'ஷகீனா, வந்தவர்க்கு காபி கொடுத்தியா?' என்று மனைவிக்குக் குரல் கொடுத்தான் ஷாரூக்.

அனைத்தும் காதில் விழ அமைதியாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ஷகீனா, 'இதோ ரெடியா இருக்குங்க' என்று குரல் கொடுத்தாள். சற்று நேரத்தில் விடைப் பெற்றுக் கொண்ட அப்துல்லாஹ் பாய் 'பால் முகம் மாறா அப்பெண்ணின் வாழ்வை நல்வாழ்வாக்கி குட்றா அல்லாஹ்' என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டார்.

ஒரு மாதம் கழிந்தது. மருமகனை பயணம் அனுப்பி வைத்து விட்டு வரும் போது மகளையும் அழைத்து வந்த அக்குடும்பத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. மகளுக்கு வித விதமாக சமைத்துப் போட்டாள் ஆயிஷா. காலேஜ் போகும் நேரத்தைத் தவிர்த்து.., ஊர் கதை, உலக கதையை தங்கையோடுப் பேசி உற்சாகமாக பொழுதைக் கழித்தான் ஷமீம்.அவ்வப்போது மகளை அனுசரனையாக பக்கத்தில் அமர வைத்து பக்குவமாக புகுந்த வீட்டைப் பற்றி அலசிலார் அன்சார். ஷகீனா மிகவும் கவனமாகவே பேசினாள். 'பெத்தவங்க இவ்வளவு செலவு செய்து கஷ்டப்பட்டு, கல்யாணம் செய்து கொடுத்திருக்காங்க., 'நான் நல்லாயிருக்கேன்னு' சொல்ற அந்த வார்த்தை தான் அவங்க மனசுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் கொடுக்கும், அது தான் எனக்கு வேணும்.' என்று மனசுக்குள்ளேயே அடிக்கடி கூறிக் கொண்டாள்.

ஷாருக் மாமியார் வீட்டுக்கு அழைத்து அனைவரிடமும் பேசினான், மனைவியோடு அடிக்கடி பேசினான். பெற்றவர்கள் மகள் நல்லாயிருக்கா என்றெண்ணி எண்ணி பூரித்துப் போயினர். 10 நாட்கள் பறந்தோடிப் போனது. சித்தூரிலிருந்து ஃபோன்! 'ஏம்மா ஷகீனா, அடிக்கடி ஃபோன்ல விசாரிக்கிற சரி., மாமியா ஒண்டியாத் தானே கெடக்கிறா, கிளம்பி வருவோம்னு ஒனக்கு தோணலையாம்மா!' என்று ஜெய்தூன் குரலில் ஒரு நொடிப்பைக் காட்ட, ஷகீனா பெட்டியைக் கட்டி விட்டாள். இன்னும் ஓரிரு நாள் தங்கிட்டுப் போம்மா என்ற பெற்றவர்களின் கெஞ்சலை சமாதானம் சொல்லி சமாளித்து விட்டு, அண்ணனை விட்டு வரச் சொல்லி அழைக்க, அரை மனதோடு சித்தூரில் கொண்டு விட்டு வந்தான் ஷமீம்.

'சொன்னவுடனே வந்துட்டாக்கா., பரவாயில்லை தான்!'

'ம்கூம்..அவுக வீட்டுல என்னத்த செஞ்சிட்டாக., 50 பவுனு நகைக்கும், 50 ஆயிரத்துக்கும் இப்படி ஒரு இடம் கெடச்சதுக்கு அவுங்க நம்ம கால்ல விழுந்து கெடக்கனும்டி.. பைத்தியக்காரி., அவுக கிட்ட கொஞ்சம் கறக்குற வரைக்கும் கறாராவே இருக்கனும் புரியுதா?' அதற்கு மகுடி ஊதிய பாம்பாய் ஜெய்தூன் தலையை ஆட்டினாள்.

ஷகீனா வலிய வலிய நெருங்கினாலும் அவர்கள் ஓர் அளவோடு வைத்துக் கொண்டனர்.ஷாருக் அடிக்கடி பேசினால், 'அவள் வெளியே போயிருக்கா, அங்க போயிருக்கா' என்று அவள் கண் முன்னேயே காரணம் கூறப்பட்டது. கணவனிடம் பேசும் போதும் இங்கிதமேயில்லாமல் கண்காணிக்கப் பட்டாள். அம்மா வீட்டிற்கும் இதே நிலை தான். அக்கம்,பக்கத்தாரிடம் அவளை நெருங்க விடுவதில்லை.அவள் அந்த வீட்டின் ஓர் அடிமையாகவே நடத்தப்பட்டாள்.

'ஜைனபு, கடைவீதியில ஒர் இடம் வெலைக்கு வந்திருக்கிறதா உன் மச்சான் சொன்னாக..வாங்கிப் போட்டுருவோமா?'

இப்பத்தானேக்கா கலியாணம் முடிஞசிருக்கு, அதுக்குள்ளே எங்கேக்கா அவ்வளவு பணத்துக்கு போறது?!'

'ஒனக்கு வாழப்பழத்த உரிச்சி வாயிலயில வைக்கனும்.. பொழைக்கத் தெரியாதவளா இருக்கியே? ஒங்காத குடு சொல்றேன்.' என்று ஜெய்தூனின் காதில் ரகசியமாய் முனு முனுத்தாள் ஜைனப்.

இரண்டு நாள் கெடுவோடு ஷகீனா ஊர் வந்து சேர்ந்தாள். ஷமீம் இன்னும் காலேஜிலிருந்து வந்திருக்கவில்லை. ஷகீனாவின் உள்ளம் வெந்து, நொந்துப் போயிருந்தாலும் அவள் அவ்வளவாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 'நான் படுற கஷ்டத்த என்னால தாங்கிக்க முடியும்.. ஆனா நானிருக்கிற நெலமை என் குடும்பத்து தெரிஞ்சு அவங்க துடிச்சுப் போறத என்னால தாங்கிக்கவே முடியாது.' என்று மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டு வார்த்தைகளை தடுமாறாமல் உதிர்த்தாள்.

'இப்ப வாங்கிப் போட்டா வசதியா இருக்கும்னு நெனக்கிறாகத்தா.. ஆனா இவுகளுக்குத் தெரியக் கூடாதாம்., நீங்களே வலிய குடுக்கற மாதிரி கொடுத்தா நல்லாயிருக்கும்னு சொல்றாகத்தா.' அத்தாவை நிமிர்ந்துப் பார்க்காமல் கூறினாள் ஷகீனா.

அன்சார் நொறுங்கிப் போனார்.'3 லட்சத்துக்கு நான் எங்க போவேன்' அவரின் மனம் ஆளாய் பறந்தது. அந்நேரம் ஃபோன் மணி அடிக்க, அன்சாரும், ஆயிஷாவும் உணர்வற்றுப் போய் அமர்ந்திருந்தனர். ஷகீனா சென்று ஃபோனை எடுக்க எதிர் முனையில் ஷாருக். மாமனாரை குசலம் விசாரிக்க யதார்த்தமாய் பண்ணியவன், மனைவியின் குரல் கேட்டு ஏகமாய் குழம்பி விட்டான். 'நான் இப்ப தான் வீட்டுக்கு ஃபோன் போட்டேன்.. நீ பெரியம்மா வீட்டுக்கு போயிருக்கிறதா அம்மா சொன்னாங்க.. ஆனா.,' என்று ஷாருக் கேட்க, ஷகீனா அதிர்ந்துப் போய் உளற, ஷாருக் நிதானித்து ஏதோ கணித்தவனாய் மனைவியிடம் குடைந்தெடுத்து விட்டான். அன்சாரும், ஆயிஷாவும் பேசுவது மருமகப்பிள்ளை என்றுணர்ந்து நாசூக்காய் நகன்று விட, ஷகீனா இருந்த மனநிலையில் கணவனிடம் கொட்டித் தீர்த்து விட்டாள்.

ஷாருக்கின் கோபத்தை அவளால் அவனது குரலிலேயே உணர முடிந்தது. 'நீ அத்தாவிடம் ஒரு பைசா வாங்கக் கூடாது. 3 நாள் தங்கிட்டு வீட்டுக்குப் போ..

' என்னங்க, எனக்கு பயமா இருக்குங்க., நீங்க இதக் காட்டிக்க வேணாம்'

உனக்கு அந்த கவலை வேணாம், நான் பார்த்துக்குறேன்.. நீ தைரியமாப் போ புரியுதா'

கணவனிடம் மனம் விட்டுப் பேசிய பிறகு ஷகீனாவின் மனசு லேசாகியிருந்தது. தந்தைக்கு வந்த நெருக்கடி போய் விட்டது என்றெண்ணும் போதே அவள் உள்ளம் மகிழ்ந்துப் போனாள். 'இப்ப படுற கஷ்டத்தோட இன்னும் கொஞ்சம் கூடப் படனும் பரவாயில்லை.. என்னை உயிராய் நினைக்கும் என் உயிர்கள் நிம்மதியாயிருக்கனும்' என்று மனதிற்குள் சாந்தியடைந்தாள். குடும்பத்தோடு கல கலவென்று இருந்து விட்டு, 3 நாட்கள் கழித்து ஊர் கிளம்பிய தங்கையை ஷமீம் கொண்டு போய் விட்டு வந்தான்.

பத்து நாட்கள் கழிந்திருக்கும். இரவு மணி 11:00.. ஃபோன் மணி அடிக்க, ஷமீம் கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தெடுத்தான். எடுத்தவன், 'யா அல்லாஹ்.. யா அல்லாஹ்..' என்று தன்னை மறந்துக் கத்தினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பெரிய ஊரின் அரசாங்க ஆஸ்பத்திரியில் அன்சாரின் குடும்பமே நிலைக் குலைந்துப் போய் சேர்ந்தது.

'சம்மந்தி' என்று புடவையை வாயில் வைத்துக் கேவினாள் ஜெய்தூன். 'பூரி சுட்டுட்டு இருந்த புள்ள மேல எண்ணை சட்டி சாய்ஞ்சி.. இல்ல.. அடுப்புல சாய்ஞ்சி அப்படியே பத்திக்கிச்சும்மா' என்று திக்கித் திணறி கூறிய ஜைனப் அப்படியே மயக்கமாவது போல் சுவற்றில் சாய்ந்து விட்டாள். ஜைனப்பின் கணவர் தள்ளாடிய அன்சாரைப் பிடித்துக் கொண்டார்.

ஒரே நாள்! அதற்குள் எத்தனைப் போராட்டம்!! பெற்ற தாய் ஒர் புறம் நீர்த்துக் கிடக்க, நினைவு விட்டு விட்டு திம்பிய ஷகீனாவை ஏகமாய் கஷ்டப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றி, பணத்தை தண்ணீராய் கரைத்து, ஊசலாடிக் கொண்டிருந்த அவள் உயிர் காக்க அத்தாவும், அண்ணனும் முடிந்தவரைப் போராடியும்..?! இன்னா லில்லாஹி... எல்லாம் முடிந்து இரண்டு நாட்களாகி விட்டது!

இதோ இன்னும் தூக்கம் விழிகளைத் தழுவ மறுக்க, படுக்கை நெருஞ்சி முள்ளாக உறுத்த, புரண்டுக் கொண்டிருந்தனர் பெற்ற நெஞ்சங்கள்! இவர்களின் விழிகளை உறக்கம் தழுவ இன்னும் எத்தனை காலம் பிடிக்குமோ?!

இப்படித் தான், வரசட்சணை எனும் கொடுமை பல கோணங்களில் பல 'ஷகீனாக்களை' சத்தமில்லாமல் சமாதியாக்கிக் கொண்டுதான் இருக்கிறது..!

முற்றும்.

4 comments:

Unknown said...

மனதை தொடும் தங்களின் சிறுகதைக்கு மிக்க நன்றி. இவ்வளவு முன்னேறிய இந்த காலத்திலேயும் இப்படியும் நடக்குமோ என்று நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது. வல்ல ஆண்டவன் தான் அனைவருக்கும் நல்ல புத்தியை தரனும்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Gayathri said...

You should write more... u are definitely talented...sincere appreciations...

Gayathri said...

You should write more... u are definitely talented...sincere appreciations...